#திருச்சி || விரைவில் மாநாடு.. காத்திருக்குது தமிழ்நாடு.. கெத்து காட்டும் விஜய் ரசிகர்கள்..!!
Vijay fans convention wall advertisement in Trichy
தமிழ் சித்திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜயின் ஒவ்வொரு அசைவையும் அவரது ரசிகர்கள் விழா போல் கொண்டாடி விடுவார்கள். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர அரசியலிலும் தீவிரமாக இறங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவில் ஒன்றாக இருந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார். அரசியலில் இறங்க முதல் படியாக டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தமிழக முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.
அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியலில் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற திருச்சியில் அடுத்த மாதம் மாநாடு நடத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பாக சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர். அதில் "திருச்சி என்றாலே திருப்பம் தான்.. விரைவில் மாநாடு.. காத்திருக்கு தமிழ்நாடு.. வா தலைவா.. " என விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுக்கும் விதமாக விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்த ஆர்.கே ராஜா, முன்னாள் நிர்வாகிகளான மும்பை பவுல் பாரதிராஜா உள்ளிட்ட பெயரில் இந்த சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது. இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vijay fans convention wall advertisement in Trichy