ஒரே நேரத்தில் குவிந்த பயனாளர்கள்...! தட்கல் நேரத்தில் முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. தளம்...! - ரெயில் பயணிகள் கடும் அவதி...!
Users gathered same time IRCTC website crashed during Tatkal time Train passengers suffer greatly
பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிட்டிருந்த ரெயில் பயணிகளுக்கு, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் ஏற்பட்ட இணையதள கோளாறு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முயன்றதால், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக பலரால் டிக்கெட் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை நாட்கள் நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் ரெயில் பயணத்துக்கு அதிக வரவேற்பு இருப்பதால், பலரும் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். வழக்கமான முன்பதிவில் இடங்கள் கிடைக்காதவர்கள், கடைசி நேரப் பயணத்துக்காக தட்கல் டிக்கெட்டை நம்பியுள்ளனர்.இந்த சூழலில், நேற்று காலை தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும், ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை அணுகினர்.
குறிப்பாக, குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கியது. அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் தங்களது பயண விவரங்களை பதிவு செய்ய முயன்றதால், இணையதளத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.இதன் காரணமாக காலை 11 மணி முதல் சுமார் 11.20 மணி வரை இணையதளத்தை சீராகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பல பயணிகளின் திரையில், அதிகப்படியான இணையதள நெரிசல் காரணமாக கோரிக்கையைச் செயல்படுத்த முடியவில்லை என்ற தகவல் மட்டுமே மீண்டும் மீண்டும் தோன்றியது.இதனால் பயணிகள் தங்களது விவரங்களை உள்ளிடவும், முன்பதிவு நடவடிக்கைகளைத் தொடரவும், கட்டணத்தைச் செலுத்தவும் முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இணையதளச் சிக்கல் ஓரளவு சரியாகி, பயணிகள் மீண்டும் முன்பதிவு செய்ய முயன்றபோது பல ரெயில்களில் தட்கல் டிக்கெட்டுகள் ஏற்கனவே முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தன.இதனால், முன்பதிவு தொடங்கும் நேரத்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காத ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.
பலரது முன்பதிவு முயற்சிகள் காத்திருப்போர் பட்டியலில் முடிவடைந்ததால், பண்டிகை பயணம் கேள்விக்குறியானது.பண்டிகை காலங்கள் மட்டுமின்றி, வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் இதுபோன்ற இணையதளச் சிக்கல்கள் அடிக்கடி ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்பதிவு தொடங்கும் நேரத்திலேயே அதிகப்படியான பயனாளர்கள் இணையதளத்தை அணுகுவது வழக்கமாக இருப்பதால், அந்த நெரிசலை சமாளிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டு, தட்கல் முன்பதிவு நேரங்களில் இணையதளம் தடையின்றி செயல்படும் வகையில் சர்வர் திறனை மேம்படுத்த வேண்டும் என ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் முன்பதிவு செய்யும்போதும் இணையதள சேவை பாதிக்காத வகையில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தி, பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Users gathered same time IRCTC website crashed during Tatkal time Train passengers suffer greatly