தமிழ்த்தென்றல் சாலமன் பாப்பையா மறைவு...! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும்...! - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
Tamil legend Solomon Papaiah passes away funeral held state honors Tamil Nadu government official announcement
தமிழ் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, தலைமுறைகளைத் தாண்டி தனது பேச்சாற்றலால் மக்களை ஈர்த்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டி, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், சொற்பொழிவாளருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற மேடைகளில் தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், எளிமையான விளக்கங்களாலும் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும், வாழ்வியல் கருத்துகளையும் சுவைபட எடுத்துரைத்து வந்தார்.மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்.
குறிப்பாக திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்ற துறையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், திரையுலகினர், பட்டிமன்ற பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி செலுத்தியபோது, சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமா என்று அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, அரசு மரியாதை வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை அமைச்சர் நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
English Summary
Tamil legend Solomon Papaiah passes away funeral held state honors Tamil Nadu government official announcement