அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல்...! மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் தேர்தல் ஆணையம்...!
By election on October 6 Election Commission process verifying electronic voting machines
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் செலுத்திய வாக்கை உறுதி செய்யும் கருவிகளின் சரிபார்ப்பு பணி இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தேர்தல் பணிகளின் அடுத்தகட்டமாக, வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்யும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த எந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாட்டுக்கான தயார் நிலை குறித்து இன்று (சனிக்கிழமை) விரிவான சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் இந்தப் பணி நடைபெறுகிறது.
எந்திரங்கள் முறையாக செயல்படுகின்றனவா, வாக்குப்பதிவின்போது எந்தவித தொழில்நுட்ப சிக்கலும் ஏற்படாத வகையில் அவை தயாராக உள்ளனவா என்பன உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் கருவிகள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
பின்னர் அவை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் தொடர்புடைய விவரங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டு, அவை வாக்குப்பதிவுக்கு தயார் செய்யப்படும்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து பாதுகாப்பாக தயார் நிலையில் வைக்கும் பணிகள் தேர்தல் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
English Summary
By election on October 6 Election Commission process verifying electronic voting machines