மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய கல்யாண நாளில் விபரீதம்...! ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த தந்தை...!
Tragedy strikes wedding day that should have been joyous celebration Father tragically dies electrocution Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் கொல்லந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (58). இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி, வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

திருமண பணிகளில் குடும்பத்தினர் பரபரப்பாக ஈடுபட்டிருந்த நிலையில், வீட்டைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலி ஒரு பகுதியில் சரிந்து கிடந்தது. இதனை சீரமைத்து மீண்டும் ஒழுங்குபடுத்த கருப்பையா முயன்றார்.இதற்காக அவர் வேலியை கம்பியால் கட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கையில் இருந்த கம்பி, வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பெட்டியில் உரசியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து கருப்பையாவை தாக்கியது. மின்சார தாக்கத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளின் திருமணத்திற்காக உற்சாகத்துடன் ஏற்பாடுகளை கவனித்து வந்த தந்தை, திருமண நாள் நெருங்கிய நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண வீட்டில் நிலவிய மகிழ்ச்சியான சூழல் ஒரே நேரத்தில் துயரமாக மாறியது.
English Summary
Tragedy strikes wedding day that should have been joyous celebration Father tragically dies electrocution Ramanathapuram