மதுராந்தகம் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் மதுராந்தகத்திற்குப் புறப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்...!
Madhurantakam by election Voting machines leave Madhurantakam heavy security
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இடைத்தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது.

அடுத்த மாதம் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் வேகம் பெற்றுள்ளதோடு, வேட்பு மனு தாக்கல் வருகிற 16-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், மதுராந்தகத்தில் அரசியல் களம் சூடுபிடித்து தீவிர பிரசாரங்கள் நடந்து வருகின்றன.
தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வி.வி.பேட் எந்திரங்களை கலெக்டர் வீரப்பன் தலைமையில் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு, மதுராந்தகம் வேளாண்மை துறை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன.
வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் கால அவகாசம் முடிந்ததும் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு, எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கும்.
இடைத்தேர்தலை அமைதியாகவும் முறையாகவும் நடத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகளும், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகளும் மதுராந்தகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
English Summary
Madhurantakam by election Voting machines leave Madhurantakam heavy security