டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ஜொலித்த ‘டோரதி’...! எழுந்து நின்று கரகோஷம் எழுப்பிய பார்வையாளர்கள்...! - கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு குவியும் பாராட்டு...! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

அந்த வரிசையில், அவரது 10-வது படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது நீண்ட திரைப்பயணத்தில் 1,540-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முந்தைய 9 திரைப்படங்களில் ‘பேட்ட’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

மற்ற படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.அதேவேளையில், தனது திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை முக்கியமான காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்புராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், முதன்முறையாக தனது முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ‘டோரதி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு ‘டோரதி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1980-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில் நட்பு மற்றும் காதலை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலகட்டத்தின் பின்னணியையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கமும், இளையராஜாவின் இசையும் இணைந்துள்ளதால், படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ சமீபத்தில் வெளியானது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன், பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ‘டோரதி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ வெளியாகியுள்ளது. இளையராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இளையராஜாவே வரிகளை எழுதியுள்ளார்.‘டோரதி’ திரைப்படத்தின் பின்னணி இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில் படத்திற்காக உருவாக்கப்பட்ட பின்னணி இசையை இளையராஜா வெளியிட்டார்.மொத்தம் 18 பின்னணி இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப உணர்வுகளை வலுப்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.‘டோரதி’ திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றிருந்தனர்.திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்ததும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பினர்.

படக்குழுவினருக்கு அவர்கள் அளித்த இந்த உற்சாகமான வரவேற்பு, சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படம் கவனத்தை ஈர்த்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாகவே சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, ‘டோரதி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dorothy shines at Toronto International Film Festival audience stands up and applauds Karthik Subbarajs film receiving praise


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->