ஆர்.கே.நகர் காவல் நிலைய விவகாரம்...! பெண்களைத் தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...! - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்...!
RK Nagar Police Station Issue Strict action should be taken against policemen who attacked women TTV Dinakaran insists
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நம்பிக்கையும் நல்லிணக்கமும் நிலவும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண்கள் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரை காவலர்கள் தாக்கியதாகவும், இதனை தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவலர்கள் தாக்கியதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஒருபுறம் முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசி வரும் நிலையில், மறுபுறம் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள் மிரட்டப்படுவதாகவும், அவமதிக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகிவிட்டதா? என்ற கேள்வியை எழுப்புகின்றன.பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களின் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பதும், அவர்களின் செயல்களுக்கு மறைமுகமாக அங்கீகாரம் வழங்குவதற்கு சமமானது என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்.
எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களை தாக்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விரிவான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே அச்சமற்ற, நம்பிக்கையான மற்றும் இணக்கமான சூழலை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
RK Nagar Police Station Issue Strict action should be taken against policemen who attacked women TTV Dinakaran insists