தமிழ்த்தென்றல் சாலமன் பாப்பையா உடல் தகனம்...! மதுரையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நிறைவு...!
Tamil legend Solomon Papaiah body cremated last rites completed with state honours Madurai
பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல், அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
அவருக்கு வயது 90.மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், தமிழ் மீதான ஆழமான புலமையாலும் தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், தமிழ் இலக்கியங்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியதுடன், தமிழின் சிறப்புகளை தனது சொற்பொழிவுகள் மூலம் தொடர்ந்து எடுத்துரைத்து வந்தார்.சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, சாலமன் பாப்பையாவின் தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவலை அமைச்சர் நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டிருந்தார்.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
இந்த நிலையில், மதுரையில் உள்ள வெப் மெமோரியல் தேவாலயத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் வைக்கப்பட்டு, உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்காத வகையில், அரசு நடைமுறைகளின்படி கவுரவ மரியாதை வழங்கப்பட்டது.அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் ஆகியோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
தத்தநேரி மின் மயானத்தில் தகனம்
இறுதி மரியாதைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலமன் பாப்பையாவின் உடல் ஊர்வலமாக தத்தநேரி மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பட்டிமன்றம், தமிழ் இலக்கியம், சொற்பொழிவு என பல்வேறு தளங்களில் தனது குரலால் தமிழை மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tamil legend Solomon Papaiah body cremated last rites completed with state honours Madurai