தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்சினை..! த.வெ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்...!
ongoing problem power cuts Tamil Nadu TVK Leader Opposition Udayanidhi Stalin criticizes government
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு மற்றும் மின்னழுத்தக் குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் த.வெ.க. அரசு திணறி வருவதாக விமர்சித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து தனது கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.அவர் தனது பதிவில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் வழங்கப்பட்டாலும், பல இடங்களில் மின்னழுத்தக் குறைபாடு ஏற்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மின்சாரத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர், பொதுமக்களின் குறைகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மக்கள் எதிர்கொள்ளும் மின்சாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மின்சாரம் மட்டுமின்றி, ஆவின் பால் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையும் சீராக நிறைவேற்ற முடியாத நிலையில் த.வெ.க. அரசு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளை அரசு கைவிட்டு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தடையின்றி வழங்குவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.த.வெ.க. அரசை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ongoing problem power cuts Tamil Nadu TVK Leader Opposition Udayanidhi Stalin criticizes government