பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம்...! மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்..! - சீமான் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே கடுமையான இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிலவும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைப்பது பொதுமக்களுக்கும் 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகத்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.தமிழ்நாடு அரசின் நிதிநிலை கடுமையான நெருக்கடியில் இருப்பதாகவும், அரசுக்கு பெருமளவில் கடன் இருப்பதாகவும், ஆண்டுதோறும் புதிய கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தெரிவித்து வரும் தவெக அரசு, கடனுக்கான வட்டியையே செலுத்துவதற்காக மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை இருப்பதாக கூறுகிறது.

இத்தகைய நிதிச்சுமைக்கு மத்தியில் சுமார் ரூ.1,200 கோடி செலவில் அவசரமாக புதிய தலைமைச்செயலகத்தை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரத்தில், இவ்வளவு பெரிய தொகையை புதிய கட்டிடத்திற்காக செலவிடுவது எந்த வகையில் நியாயமானது? தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச்செயலகத்தில் இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் இருப்பதால் புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுவதாக அரசு கூறுகிறது.

அப்படியிருக்க, அதைவிட அதிகமான இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிலவும் பட்டினப்பாக்கத்தையே புதிய தலைமைச்செயலகத்திற்கான இடமாக தேர்வு செய்திருப்பதன் பின்னணி என்ன? இந்த முடிவு பொதுமக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டதா அல்லது முதல்-அமைச்சரின் தனிப்பட்ட வசதியை கருத்தில் கொண்டதா என்ற கேள்வி எழுகிறது.

பரந்தூர் மக்களின் எதிர்ப்பை ஏற்று அங்கு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்ட அரசு, பட்டினப்பாக்கத்தில் உள்ள 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பை ஏன் கருத்தில் கொள்ளவில்லை? அவர்களின் வாழ்வாதாரத்தைவிட வேறு காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள், மீனவ மக்களின் வியாபாரத் தளங்கள் என பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே ஏராளமான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

குறுகிய சாலைகளைக் கொண்ட இந்தப் பகுதியில் இப்போதே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தலைமைச்செயலகமும் அமைக்கப்பட்டால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தலைமைச்செயலகத்திற்கு வருகை தரும் நேரங்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக சாலைகளில் நீண்ட நேரம் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும் நிலை உருவாகலாம். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்குமிடங்கள், பொதுமக்கள் காத்திருக்கும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளையும் குறுகிய பரப்பளவு கொண்ட பட்டினப்பாக்கத்தில் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? அனைத்து வசதிகளையும் வலுக்கட்டாயமாக ஒரே இடத்தில் அமைத்தாலும், முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவைகளை அந்த இடம் எவ்வாறு பூர்த்தி செய்யும்? எதிர்கால விரிவாக்கத்திற்கே போதுமான இடவசதி இல்லாத பகுதியில் தலைமைச்செயலகத்தை அமைப்பது எந்த வகையான தொலைநோக்கு திட்டமிடல்? இதற்கும் மேலாக, பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியாக இருப்பதால் இயற்கை பேரிடர்களின் தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய பகுதிகளில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும்.

எதிர்காலத்திலும் சுனாமி உள்ளிட்ட கடல்சார் பேரிடர்களால் இந்தப் பகுதி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.மேலும், காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எதிர்வரும் 2040 முதல் 2070 வரையிலான காலகட்டத்தில் கடல் மட்டம் உயரக்கூடும் என்றும், இதன் தாக்கத்தால் சென்னை கடற்கரைப் பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சென்னை செயல்திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய அபாயங்கள் உள்ள கடலோரப் பகுதியை அடுத்த 100 ஆண்டுகளுக்கான தலைமைச்செயலகம் அமைப்பதற்கான இடமாக தேர்வு செய்வது தொலைநோக்கு சிந்தனையா என்ற கேள்வி எழுகிறது.முதல்-அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே மக்களை நேரில் சந்தித்து வந்த விஜய், தற்போது தலைமைச்செயலகத்தையே தனது வீட்டிற்கு அருகில் அமைக்கும் வகையில் முடிவு எடுத்திருப்பது பொதுநல நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வசதிக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் மற்றும் இயற்கை பேரிடர் அபாயம் நிறைந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.அரசு தனது முடிவை திரும்பப் பெறாவிட்டால், இதனால் பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களை ஒன்றிணைத்து நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.பட்டினப்பாக்கம் மீனவ கிராம மக்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.சேலம் எட்டுவழிச்சாலைக்காக விளைநிலங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து போராடியதையும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததையும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மக்களின் துணையுடன் இந்தத் திட்டத்தை உறுதியாக எதிர்த்து தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவ மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New headquarters Pattinapakkam government should abandon project that affect livelihood of fishing villages Seeman warns


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->