பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோவில் பெருமை...! உலகளவில் புகழ் சேர்த்த மோடிக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு...!
Rameswaram temple pride at BRICS summit Nayinar Nagendran praises Modi for gaining global fam
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்கும் இடத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் பிரகாரம் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,"தலைநகர் புதுடெல்லியில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையும், செல்வாக்கும் உயர்ந்து வரும் நிலையில், உலகத் தலைவர்களை வரவேற்கும் முதன்மை நுழைவு வாயிலில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் பிரம்மாண்டமான பிரகாரம் பின்னணியாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையான கட்டிடக்கலை திறனையும், ஆன்மிகப் பாரம்பரியத்தின் சிறப்பையும் உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஏற்பாடு அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தனித்துவமான கலாசார அடையாளம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் நீண்ட பிரகாரங்கள், இந்தியாவின் கட்டிடக்கலை வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றதாகும்.
இந்தப் பெருமைமிக்க பிரகாரத்தின் பின்னணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று கைகுலுக்கியுள்ளார்.மேலும், ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தின் வரலாற்றுச் சிறப்பையும், அதன் கட்டிடக்கலை பெருமையையும் உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி நேரடியாக எடுத்துரைத்துள்ளார்.
இந்தக் காட்சி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமிதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தமிழகத்தின் பாரம்பரியத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள அக்கறை பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக வெளிப்பட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கோவிலின் பெருமையை உலகத் தலைவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றதன் மூலம், தமிழகத்தின் தொன்மையான கலாசார அடையாளத்துக்கு சர்வதேச அரங்கில் மேலும் சிறப்பு சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கலை, பண்பாடு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தமிழர்கள் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rameswaram temple pride at BRICS summit Nayinar Nagendran praises Modi for gaining global fam