அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்..இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!
The Chief Minister MK Stalin is launching the breakfast scheme in government-aided schools today
2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து இத்திட்டம் 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்டு கல்வி பயின்று வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர். பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
English Summary
The Chief Minister MK Stalin is launching the breakfast scheme in government-aided schools today