டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் முயற்சி – ராஜ்கோட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கைது
Auto driver from Rajkot arrested for attempting to attack Delhi Chief Minister Rekha Gupta
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்தில் அவரைக் கட்டுப்படுத்தினர். விசாரணையில், அவர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் ராஜேஷ்பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டார்.
விசாரணையில், ராஜேஷ் நாய்களை மிகவும் நேசிப்பவர் என்றும், தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவால் கோபமடைந்திருந்தார் என்றும் தெரியவந்தது.இதுவே, டெல்லி முதல்வரை தாக்க அவர் எடுத்த முடிவுக்குக் காரணமாக இருந்தது என்று போலீசார் கூறினர்.
மேலும் விசாரணையில், ராஜேஷ் வெறும் தாக்குதலுக்காக அல்லாது, ரேகா குப்தாவை கொலை செய்யும் திட்டத்தோடு டெல்லி வந்தது உறுதியானது.
அவரிடம் இருந்த கத்தியை, முதலமைச்சரின் இல்லத்தை பாதுகாத்து நிற்கும் காவல்துறையினரை கண்டதும், பயந்துவிட்டு சிவில் லைன்ஸ் பகுதியில் தூக்கி வீசியுள்ளார். அதை தற்போது போலீசார் மீட்டுள்ளனர்.
ராஜேஷ் டெல்லிக்கு வரும்போது, தனது ஊரைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டெல்லி காவல்துறை ராஜ்கோட்டில் அந்த ஐந்து பேரையும் விசாரித்தது.
அதில், கூகுள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய மற்றொரு ஆட்டோ ஓட்டுனரையும் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
தற்போது, ராஜேஷ் சகாரியா மீது கொலை முயற்சி மற்றும் பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த சம்பவம், தலைநகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Auto driver from Rajkot arrested for attempting to attack Delhi Chief Minister Rekha Gupta