விருதுநகர் | தொலைந்து போன நகையை உரியவரிடம் மீட்டு கொடுத்த மாணவிகள்! குவியும் பாராட்டுக்கள்!
teacher missed jewelry returned students
விருதுநகர், நரிக்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சசிகலா என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கமுதி அருகே உள்ள மறைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் சசிகலா நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக நரிக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அவர் தனது கைப்பையில் இருந்த நகைகளை சரிபார்த்து கொண்டிருந்துள்ளார். உலக்குடி பேருந்து வந்ததும் அவசரமாக சசிகலா பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்று விட்டார்.
பள்ளிக்குச் சென்று தனது கைப்பையை பார்த்த போது அதில் இருந்த இரண்டரை சவரன் தங்க செயின் காணாமல் போனதை கண்டு ஆசிரியை சசிகலா அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து ஆசிரியை சசிகலா உடனடியாக நரிக்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று நகையை தேடி பார்த்து உள்ளார்.
இருப்பினும் நகை கிடைக்காததால் இது குறித்து நரிக்குடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நரிக்குடியைச் சேர்ந்த சரவணன் சாஸ்தா மகள் மோகனா ஸ்ரீ.

இவர் நரிக்குடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சிலர் நேற்று காலை பள்ளிக்குச் செல்ல நரிக்குடி பேருந்து நிலையத்திற்கு வந்தபோது கீழே விழுந்து கிடந்த தங்கச் செயினை எடுத்து அவரது பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர், நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியதில், பேருந்து நிலையத்தில் ஆசிரியை தவறவிட்ட தங்க நகையை மாணவிகள் மீட்டு தலைமை ஆசிரியரிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் இது குறித்து சசிகலாவிடம் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு நரிக்குடி காவல் நிலையத்திற்கு உடனடியாக வரவழைத்து தகுந்த அடையாளங்களை தெரிவித்து ஆசிரியை சசிகலா தொலைந்து போன தங்க நகையை வாங்கி கொண்டார்.
மேலும், மீட்டுக் கொடுத்த இளம்வயது மாணவிகளின் நேர்மையான செயலை நரிக்குடி காவல் துறையினர் மற்றும் ஆசிரியை சசிகலா, தலைமை ஆசிரியர் ஆகியோர் பாராட்டினர்.
English Summary
teacher missed jewelry returned students