#BigBreaking :: தாமதமாக வந்த பள்ளி மாணவர்கள்..!! மழையில் நிற்க வைத்த தனியார் பள்ளி..!! சென்னையில் அரங்கேறிய கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் தாமதமாக வந்த பள்ளி மாணவர்களை மழையில் நிற்க வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..!! 

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இருப்பினும் சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் அமைந்துள்ள என்.எஸ்.என் மெமோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளிக்கு இன்று காலை மாணவ மாணவிகள் மழையினால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 நிமிடம் காலதாமதமாக சென்றுள்ளனர். 

இந்த பள்ளியில் வழக்கமாக 8:50 மணிக்கு பள்ளி நேரம் துவங்கியதும் நுழைவாயிலை மூடி விடுவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 8:55 மணி முதல் 9 மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். இதனால் 5 நிமிடங்கள் காலதாமதமாக வந்த மாணவ மாணவிகளை வகுப்புகளுக்கு அனுமதிக்க முடியாது வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

ஒரு சில மாணவர்களை பள்ளியின் வாயிலில் பெற்றோர்கள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பெற்றோர்கள் சென்ற பிறகு பள்ளியில் அனுமதிக்காதது மாணவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளியின் நுழைவாயிலில் காத்திருந்துள்ளனர்.

மேலும் சில மாணவர்களை தாமதமாக அழைத்து வந்த பெற்றோர்கள் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐந்து நிமிடம் கால தாமதமானால் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை அனுமதிக்க முடியாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் பள்ளியின் வாயில் காத்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு உள்ளனர். இதனை அடுத்து சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கசாமி தலைமையிலான காவல்துறையினரும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் தாமதமாக வந்த பள்ளி மாணவர்களை அனுமதிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் உண்டாகியுள்ளது.

மழைக்காலங்களில் அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருக்க வேண்டும். அல்லது தாமதமாக வரும் மாணவர்களை அனுமதிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி இருக்க வேண்டும். இவ ஏதுமில்லாமல் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மீதான அக்கரையில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tambaram NSN school made late students stand in the rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->