'உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை: போக்சோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்': முதல்வருக்கு பதிலடி கொடுத்த இ.பி.எஸ்..!
At least bow your head in shame after seeing the POCSO cases EPS responded to the Chief Minister
அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில், முதல்வர் ஸ்டாலின் தான் வெட்கி தலை குனிய வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 09 பேருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், 'பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளப்பதிவில் பதிலளித்து கூறியுள்ளதாவது: அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் முதல்வர் ஸ்டாலின்!
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க ,மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்! என்று அந்த பதிவில் இ.பி.எஸ்., சரமாரியாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
At least bow your head in shame after seeing the POCSO cases EPS responded to the Chief Minister