பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? காங்கிரஸ் தலைவர் கேள்வி!
Congress election comm
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேர்தல் ஆணையம் பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக மாறிவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த அவர், 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக போலி படிவம் 7 மூலம் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக ஊடகங்கள் வெளிப்படுத்திய விவகாரத்தை எடுத்துக்காட்டினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தேவையான முக்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் இன்னும் வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பெயர் நீக்கத்தில், படிவம் 7 முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. பிப்ரவரி 2023-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் 5,994 போலி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆரம்பத்தில் சில ஆவணங்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தாலும், தற்போது முக்கிய ஆவணங்களை மறைத்து வைக்கிறது என்று கார்கே குற்றம்சாட்டினார்.
இதனால், வாக்குத் திருட்டின் பின்னணியில் இருப்போரை தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறதா, பாஜகவின் அழுத்தத்திற்கு தளர்ந்துவிட்டதா என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மக்களின் வாக்குரிமையும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.