திடீர் தகராறு.. கொடூரக் கொலை...! கொன்றுவிட்டு சடலத்தை மறைக்க முயன்ற நண்பன் காவலர்களிடம் சிக்கியது எப்படி...?
sudden argument brutal murder How did friend who tried to kill and hide body get caught by police
நாகை மாவட்டத்தில் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலைச் சம்பவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பண்ணத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் கார்த்தி (39), திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கார்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, மரணத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், கார்த்தியின் உயிரிழப்புக்கு பின்னால் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியது. விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த கார்த்தி, கொக்காலடி பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பக்கிரிசாமியின் மகன் விக்னேஷ்வரன் (31) என்பவருடன் மது அருந்தியதாக தெரியவந்தது.
பின்னர், இருவரும் அருகில் உள்ள குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன், கார்த்தியை குளத்தில் பலவந்தமாக மூழ்கடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற விக்னேஷ்வரன், கார்த்தியின் உடலை குளத்தில் இருந்து தூக்கிச் சென்று அருகில் இருந்த வாய்க்காலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தலைஞாயிறு காவலர்கள், தலைமறைவாக இருந்த விக்னேஷ்வரனை விரைந்து கைது செய்து, கொலைக்கான முழு பின்னணி மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
sudden argument brutal murder How did friend who tried to kill and hide body get caught by police