நம்பி நாராயணனைத் தொடர்ந்து ஜி.டி. நாயுடு...! மீண்டும் ஒரு பிரம்மாண்ட பயோபிக்...! - மாதவனின் 'GDN' மிரட்டல் டிரெய்லர் வெளியீடு...!
Following Nambi Narayanan GD Naidu Another grand biopic Madhavan GDN teaser trailer released
தமிழகத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி.நாயுடுவின் வாழ்வியல் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், அவரது சொந்த மண்ணான கோயம்புத்தூரில் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டு பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நடிகர் ஆர்.மாதவன் ஜி.டி.நாயுடுவின் கதாபாத்திரமாக உருமாறி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அரசியல் மற்றும் தொழில்துறை சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வரலாற்றுப் படைப்பு, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெளியாகியுள்ள டிரெய்லரில், உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகரும் காலத்திற்கு முன்பே எதிர்காலத்தை கணித்த மேதையாக ஜி.டி.நாயுடு சித்தரிக்கப்படுகிறார். அவரது புதுமையான கண்டுபிடிப்புகளும், தொழில்துறை முன்னேற்றமும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், தேசத்துரோகம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரது வளர்ச்சியை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிரெய்லரின் முக்கியமான காட்சியில், ஜெர்மனி மற்றும் நாஜி அமைப்புகளுடன் இணைந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஜி.டி.நாயுடு மீது பிரிட்டிஷ் அதிகாரி குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு பதிலளிக்கும் மாதவன், "நீங்கள் எந்த மண்ணை ஆக்கிரமித்திருக்கிறீர்கள்... யாரிடம் பேசுகிறீர்கள் என்பதை விரைவில் புரிந்துகொள்வீர்கள்" என்ற ஆவேசமான வசனத்தைப் பேசும் தருணம் ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளியுள்ளது.
"Feared by the British.. Forgotten by his countrymen" என்ற உணர்வுபூர்வமான வாசகத்துடன் டிரெய்லர் நிறைவடைவது, படத்தின் மையக் கருத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது.இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமாருடன் இணைந்து ஆர்.மாதவனே எழுதியுள்ளார். ஜி.டி.நாயுடுவின் இளமை முதல் முதுமை வரை நீளும் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பதிவு செய்யும் வகையில், மாதவன் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, முதியவராக அவர் தோன்றும் தோற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மேக்கப் மாற்றம், அவரை அடையாளம் காண முடியாத அளவிற்கு வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, அதிதி பாலன், டிஜே அருணாசலம், கனிஹா, கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் மாதவனின் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் மீண்டும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள நிலையில், அரவிந்த் கமலாநாதன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘ஜி.டி.என்’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இந்தப் படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
English Summary
Following Nambi Narayanan GD Naidu Another grand biopic Madhavan GDN teaser trailer released