யானை தந்தங்களை ஒப்படைக்கத் தயார்...! - கேரள வனத்துறையிடம் நடிகர் மோகன்லால் திடீர் கோரிக்கை...!
Ready hand over elephant tusks Actor Mohanlal sudden request Kerala Forest Department
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்த யானை தந்தங்கள் மற்றும் தந்தங்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் தொடர்பான விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் வனத்துறையிடம் அவற்றை முறைப்படி ஒப்படைப்பதற்கான விண்ணப்பம் நடிகர் மோகன்லாலிடம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

கொச்சி தேவரா பகுதியில் வசித்து வரும் மோகன்லாலின் இல்லத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, யானை தந்தங்கள் மற்றும் அவற்றால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அப்போது கேரள அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, யானை தந்தங்களை சட்டப்பூர்வமாக வைத்திருக்க கேரள வனத்துறை வழங்கியிருந்த அனுமதி ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக மோகன்லால் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த உரிமைச் சான்றிதழ்கள் சட்ட நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாமல் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட கேரள உயர்நீதிமன்றம், அவற்றை செல்லாதவை என அறிவித்து ரத்து செய்தது.பின்னர், உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள யானை தந்தங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட கலைப்பொருட்களை வனத்துறையிடம் சட்டப்படி ஒப்படைக்க மோகன்லால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
வனத்துறை அறிவித்துள்ள ஒருமுறை பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை எர்ணாகுளம் மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திக் வழங்கியுள்ளார். மேலும், வனத்துறை அதிகாரிகள் மோகன்லாலின் இல்லத்திற்குச் சென்று, யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை முறையாக பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகளை தொடங்கியுள்ளனர்.
தேவையான ஆவணப் பணிகள் நிறைவடைந்ததும், அவற்றை வனத்துறையிடம் மோகன்லால் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ready hand over elephant tusks Actor Mohanlal sudden request Kerala Forest Department