ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் கடும் எதிர்ப்பு...! 'எங்கள் முப்பாட்டன் முருகனின் வரலாற்றை மாற்றுவதா...? என அதிரடி முழக்கம்...! - Seithipunal
Seithipunal


தமிழ் இறையோனாக போற்றப்படும் முருகப்பெருமானின் வரலாற்றை மாற்றியமைத்து சித்தரிக்கும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என்றும், அவ்வாறு செயல்பட்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் ‘என்.டி.ஆர்.திரிவிக்ரம்’ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில், தமிழர்களின் இறையோனாக போற்றப்படும் முருகப்பெருமான் வடஇந்தியாவில் பிறந்தவர் என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்று உண்மைகளை திரித்து புதிய கருத்துகளை திணிக்க முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்க செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழர் நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல, தனித்துவமான மொழி, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல், மெய்யியல், இறை வழிபாட்டு மரபு ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட செம்மையான நாகரிகம் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கையை வணங்குவதும், முன்னோர்களை தெய்வமாக போற்றுவதும் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு மரபு என்றும், அதனால்தான் குறிஞ்சித் திணையின் தலைவனாக விளங்கும் முருகப்பெருமான் தமிழர்களால் 'முப்பாட்டன்' என்று போற்றப்பட்டு வழிபடப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் மறைக்கப்பட்ட அடையாளங்களையும் வீர வரலாறுகளையும் மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில், கற்பனைப் படைப்புகள் மூலம் வரலாற்றை சிதைத்து தவறான தகவல்களை பரப்புவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழர்களின் இறை மரபுகள் மற்றும் தெய்வ அடையாளங்கள் பின்னாளில் வேறு பெயர்களில் மாற்றப்பட்டதாகவும், முருகன் சுப்பிரமணியனாகவும், கண்ணன் கிருஷ்ணனாகவும், திருமால் விஷ்ணுவாகவும், கொற்றவை பார்வதியாகவும், சிவன் ருத்திரனாகவும் மாற்றப்பட்டதாகவும் தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

"கடவுளையே உலகத்திற்கு வழங்கிய இனத்தின் வாரிசுகள் நாங்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்."தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்" என்ற முழக்கத்தை மீண்டும் வலியுறுத்திய சீமான், முருகப்பெருமான் தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல் மற்றும் அடையாளத்துடன் ஒன்றிணைந்த இறையோன் என்றும், அவரை தமிழர்களிடமிருந்து பிரிக்க எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர் வழிபாட்டு மரபில் உள்ள தெய்வங்களை அனைவரும் வணங்குவதற்கு உரிமை இருந்தாலும், அவற்றின் வரலாற்றை மாற்றியமைத்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை சிதைக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் முதல் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற பக்தி இலக்கியங்கள் வரை முருகப்பெருமானை தமிழர் இறையோனாகப் போற்றிப் புகழ்ந்துள்ளன என்றும், பல்வேறு செந்தமிழ் பெயர்களால் அவரை இலக்கியங்கள் கொண்டாடுகின்றன என்றும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள மலைகளிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகப்பெருமானின் திருத்தலங்களிலும் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு மரபு இன்றளவும் தொடர்கிறது என்றும், முருகப்பெருமான் தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெரும் இறையோன் என்ற உண்மையை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் வரலாற்றை மாற்றியமைக்கும் அல்லது தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை சிதைக்கும் எந்த முயற்சியும் தொடர்ந்தால், அதனை முன்னெடுப்போர் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீமான் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman strongly opposes Jr NTR film Are you changing history our great grandfather Murugan slogan said


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->