திறந்திருந்த மரணக் குழி...பறிபோன பிஞ்சு உயிர்...! - கள்ளக்குறிச்சியில் கிணற்றில் மூழ்கி குழந்தை உயிரிழந்த விபரீதம்...!
open pit death child who fell into it survived Tragedy child drowned well Kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில், வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் - பூமிகா தம்பதியரின் 3 வயது மகன் லஷ்வின், நேற்று மதிய நேரத்தில் வீட்டின் பின்புறம் தனியாக விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரம் கழித்தும் குழந்தை வீட்டிற்குள் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுற்றுப்புற பகுதிகளில் தீவிரமாக தேடத் தொடங்கினர்.பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால், வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் கிணற்றை சோதனை செய்தபோது, சிறுவன் லஷ்வின் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இந்த காட்சி பெற்றோர் மற்றும் உறவினர்களை கதறி அழ வைத்தது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பகண்டை கூட்டு ரோடு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதி மக்களிடமும் சம்பவம் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, சிறுவனின் உடலை கைப்பற்றிய காவலர்கள், உடற்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
open pit death child who fell into it survived Tragedy child drowned well Kallakurichi