'டிசைன் பிடிக்கல' எனக்கூறி 85 சவரன் அவுட்...! நகைக்கடைக்காரரையே அலறவிட்ட பெண்...! நடந்து என்ன...?
85 sovereigns out saying I dont like design woman who made jeweler scream What happened
சென்னையில் நகை வாங்க வருபவர் போல தினந்தோறும் கடைக்கு வந்து நம்பிக்கையை பெற்ற பெண் ஒருவர், சிறிது சிறிதாக 85 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாதங்களாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த நூதன திருட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமானது.
சென்னை வியாசர்பாடி 14-வது மேற்கு குறுக்குத் தெருவில் வசிக்கும் அன்குஷ் (33), தனது வீட்டின் தரைத்தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து முகத்தை மறைத்தபடி அடிக்கடி அவரது கடைக்கு வந்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் போல பல்வேறு நகைகளை எடுத்து ஆர்வமாக பார்த்துவிட்டு, எந்த வடிவமும் பிடிக்கவில்லை என்று கூறி வாங்காமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், கடையில் இருந்த நகைகளை சமீபத்தில் கணக்கிட்டபோது, சுமார் 85 சவரன் தங்க நகைகள் மாயமானதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்து சென்ற அதே பெண், நகைகளை தனது ஆடைக்குள் மறைத்து வெளியே எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. மேலும், திருடிய நகைகளுடன் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் காட்சிகளும் தெளிவாக பதிவாகியிருந்தன.
இதையடுத்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான கார் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது மீஞ்சூரைச் சேர்ந்த ரிகானா (50) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ரிகானாவை காவலர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், இந்த திருட்டில் அவருக்கு உதவியவர்கள் யாரேனும் உள்ளனரா, மீதமுள்ள நகைகள் எங்கு சென்றன, இதேபோன்ற முறையில் வேறு நகைக்கடைகளிலும் அவர் திருட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
85 sovereigns out saying I dont like design woman who made jeweler scream What happened