'எங்ககிட்ட ஏன் கேக்குறீங்க.. திமுக, தவெக, இபிஎஸ்-கிட்ட கேளுங்க...! பேரத்தில் உண்மை இருந்தால் முழு விசாரணை தேவை...! - திருமாவளவன்
Why you asking us Ask DMK Tvk EPS If there truth deal full investigation needed Thirumavalavan
தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சி குறித்த குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரை ரூ.180 கோடி கொடுத்து விலைக்கு வாங்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களை காவலர்கள் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, த.வெ.க. அரசை கவிழ்க்கும் நோக்கில் குதிரை பேர அரசியல் நடத்தப்படுவதாக ஆளுங்கட்சி தரப்பில் தி.மு.க. மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, த.வெ.க. அரசே சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதுதொடர்பாக மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர், "அ.தி.மு.க.வுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் ஏன் இதுவரை வெளிப்படையாக பேசவில்லை? த.வெ.க. மீது கடுமையாக எதிர்வினை ஆற்ற வேண்டியவர்கள் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.மேலும், "அ.தி.மு.க.வை முழுமையாக த.வெ.க.வில் இணைப்போம் என்று ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறதென்றால், அது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதா, அரசியல் நெறிமுறைக்கு உகந்ததா என்பதை முதலில் அவர்களிடமே கேட்க வேண்டும்.
அதற்கு பதிலாக, இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லாத எங்களிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவது பொருத்தமல்ல" என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.க.வை குறிவைத்து இத்தகைய அரசியல் நகர்வுகள் நடைபெறுவதாக பேசப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாமல் அமைதியாக இருப்பது ஏன்?" என்றும் வினவினார்.
குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தலையிடும் அதிகாரம் இருந்தால் அவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
மேலும், "தமிழக அரசியலில் குதிரை பேரம் வெளிப்படையாக நடைபெறுகிறது என்று கூறப்படுகிறதென்றால், அதில் தொடர்புடையவர்கள் யார் என்பதை நேரடியாக கேள்வி கேட்க வேண்டும். த.வெ.க. மீது குற்றச்சாட்டு இருந்தால் அக்கட்சித் தலைமையிடமும், தி.மு.க. மீது குற்றச்சாட்டு இருந்தால் அக்கட்சித் தலைமையிடமும் விளக்கம் கேட்க வேண்டும்.
இதனால் பாதிக்கப்படுவதாக கூறப்படும் அ.தி.மு.க. தலைமையிடமும் கேள்வி எழுப்ப வேண்டும். அவற்றை விடுத்து, எந்தவித தொடர்பும் இல்லாத எங்களைப் போன்ற கட்சிகளிடம் தொடர்ந்து இதே கேள்விகளை முன்வைப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்று தெரிவித்தார்.
English Summary
Why you asking us Ask DMK Tvk EPS If there truth deal full investigation needed Thirumavalavan