நலன் காக்கும் ஸ்டாலின்சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் நாசர் பார்வையிட்டார்!
Stalins special medical camp for public welfare Minister Nassar visited
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு பேசினார்.
நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் சிறப்பான திட்டத்தில் முழு உடல் பரிசோதனை திட்டம் மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 1256 முகாம்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. முகாம்களில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, ஆவடி சோதனை சாவடி அருகில் உள்ள இம்மாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரத்த பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படும்.இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, இ.சி.ஜி, எக்ஸ்ரே, கார்டியோகிராம், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் அந்த முகாமிலேயே மேற்கொள்ளப்படும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 14 ஊரக வட்டாரங்களிலும் 42 முகாம்களும், ஆவடி மாநகராட்சியில் 3 முகாம்கள் என மொத்தம் 45 முகாம்கள் வாரந்தோறும் நடைபெற உள்ளது என அமைச்சர் கூறினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மாற்றுத்திறனாளிக்கு சதவிகித அடையாள அட்டைக்கான ஆணைகளை வழங்கினர், அனைத்து பரிசோதனை கூடங்களையும் நேரில் பார்வையிட்டு பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், இணை இயக்குனர் (தொற்று நோய்) மரு.கிருஷ்ணராஜ்,இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அம்பிகா சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ் (திருவள்ளூர்), பிரபாகரன் (பூவிருந்தவல்லி), உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Stalins special medical camp for public welfare Minister Nassar visited