#திருச்சி || உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. துப்பாக்கி வழங்க கோரி வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..!!
Revenue dept officials demanding provide guns for security
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ரெங்கநாதபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் பிரபாகரன் என்பவர் துறையூர் வட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். அவர் பணியாற்றி வரும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் மலையடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செம்மண் திருடி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி துறையூர் வட்டாட்சியர் வனஜா வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நேரடியாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து வட்டாட்சியரின் உத்தரவின் பேரில் தனி ஆளாக விரைந்து சென்ற பிரபாகரன் நரசிங்கபுரம் டைல்ஸ் பிள்ளையார் கோவில் அருகே எதிரே வந்த ஜேசிபி வாகனத்தை மறித்து வாகனத்திலிருந்து சாவியையும், வாகன ஓட்டுனர் கந்தசாமியின் செல்போனை எடுத்துக் கொண்டு செம்மண் திருடப்படுவதாக சொல்லப்பட்ட மலையடி வாரம் பகுதிக்கு தன் வாகனத்தில் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி வாகன உரிமையாளர் தனபால், அவர்களுடைய உதவியாளர் மணி ஆகியோர் வருவாய் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது மணி என்பவர் வருவாய் ஆய்வாளர் பின் கழுத்தில் கடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட வருவாய் துறையினர் விரைந்துள்ளனர்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் தப்பிச் சென்றதால் வருவாய் துறையினர் அவரை மீட்டு பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்த பின்னர் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ணஅரசு ஊழியரை தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்திற்கு கருப்பு பட்டை அணிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும் மண் கொலையை தடுத்து நிறுத்திய வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும், தற்காப்பிற்காக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Revenue dept officials demanding provide guns for security