ராஜபாளையம் ரவுடி குத்தி கொலை! குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!
Rajapalayam rowdy death
விருதுநகர், ராஜபாளையம் அருகே காமராஜ் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் பாண்டிகாளி (வயது 22).
இவர்கள் ராஜபாளையம் அருகே கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் பாண்டிகாளி அவரது தாய் மாமன் காளீஸ்வரன் இருவரும் மது குடித்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் பிரச்சனை செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாண்டிகாளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நேற்று ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு காளீஸ்வரன் மற்றும் பாண்டிகாளி இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 22), ஈஸ்வரன் (வயது 30), சுந்தர்ராஜ் (வயது 25) ஆகிய மூவரும் பாண்டிகாளி மற்றும் காளீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்து 3 பேரும் பாண்டிகாளியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் பாண்டிகாளி கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக பாண்டிகாளியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.