சிறுமிகளுக்கு கொடுமை செய்த பாதிரியார்... நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை என்ன...?
priest who abused girls What drastic punishment given by court
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம் பகுதியில் செயல்பட்டு வந்த கிறிஸ்தவ திருச்சபையில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஆபிரகாம் (47).

கடந்த 2022-ம் ஆண்டு திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், மீறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமிகளை மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தேவர்குளம் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் வலுவான வாதங்களை முன்வைத்தார்.வழக்கில் காவலர்கள் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 4 சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்த குற்றத்திற்காக ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
4 சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இது 4-வது முறை எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
priest who abused girls What drastic punishment given by court