சட்டமன்றத்தில் ஒரு பேச்சு... பிரமாண பத்திரத்தில் வேறு கணக்கு...? கார் இல்லை என்ற எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரம் வைரல்...!
speech assembly different account affidavit Asset details MLAs who dont have car go viral
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார், ஓட்டுநர் மற்றும் வாகனச் செலவுக்காக மாதம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு சட்டமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது. இதனுடன், அலுவலகப் பணிகளுக்காக உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடந்த வாரம் சட்டமன்றத்தில் பேசும்போது, தனது தொகுதி சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும், தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு வந்து செல்வதற்கு வாடகை வாகனத்தையே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பணியாற்றுவதற்கு போதுமான வாகன வசதி இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.மேலும், சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரால் தனியாக செயலாளரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும், எனவே உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சில நாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாகன வசதி குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.காரை இயக்க ஓட்டுநரும் நியமிக்கப்படுவார்.
இதுமட்டுமின்றி, வாகனச் செலவுக்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் பேசும்போது, தங்களுக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பெரியகுளம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கல்லூரியில் காதல் தோல்வியடைந்த பிறகு தனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லை என்றும், தற்போது முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருப்பதாகவும் கூறினார்.
கார் இல்லாததால் ஆட்டோவில் வந்து செல்வதாகவும், தற்போது அரசு கார் வழங்குவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஒருபுறம் சட்டமன்றத்தில் கார் மற்றும் வாகன வசதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் அந்த அறிவிப்புடன் தொடர்புடைய சில உறுப்பினர்களின் தேர்தல் பிரமாணப் பத்திர சொத்து விவரங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
கார் வசதி கோரிய ஜோதிமணி, இன்னோவா கார் வேண்டும் என்று கூறிய சண்முகம், ஆட்டோவில் வந்து செல்வதாக தெரிவித்த சபரி ஐங்கரன் ஆகியோரின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சொத்து விவரங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
ஜோதிமணி தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், அவரது மனைவியிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும், தனக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.85 லட்சத்து 47 ஆயிரம் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் இன்னோவா கார் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிய சண்முகத்தின் தேர்தல் பிரமாணப் பத்திர விவரங்களும் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.அதில், தன்னிடம் டொயோட்டா, வோல்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நான்கு கார்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரூ.6 கோடியே 49 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.31 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 52 லட்சம் என தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆட்டோவில் சட்டமன்றத்துக்கு வந்து செல்வதாக தெரிவித்த சபரி ஐங்கரனின் தேர்தல் பிரமாணப் பத்திர விவரங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.
அதில், தன்னிடம் டாடா டிகோர் கார் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சத்து 76 ஆயிரம் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டமன்றத்தில் வாகன வசதி குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் ஒருபுறம் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவர்களது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள வாகனங்கள் மற்றும் சொத்து விவரங்களும் தற்போது கவனம் பெற்றுள்ளன.
இதனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வாகன வசதி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
speech assembly different account affidavit Asset details MLAs who dont have car go viral