சிசுவை கலைக்க டார்ச்சர்: மகளுடன் கர்ப்பிணி தற்கொலை!
Pregnant woman commits suicide with daughter
கருவில் உள்ள பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால் கர்ப்பிணி தாய் மற்றும் பெண் குழந்தை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக கணவன், மாமனார், மாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கவாம்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ், உமா தேவி,இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தைமகளும் கடந்த 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்துகணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் கருவில் இருப்பது பெண் சிசு என தெரிவித்துள்ளனர்.
இதனால் விக்னேஷ், மாமனார் ஜெயவேல் மற்றும் மாமியார் சிவகாமி ஆகியோர் உமாதேவியின் கருவை கலைக்க வற்புறுத்தியது மட்டுமில்லாமல் அதே கிராமத்தைச் சார்ந்தவரை அணுகி உமாதேவியின் சுருவை கலைக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான உமா தேவி, பெண் குழந்தையுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து உமா தேவி, அவரது முதல் பெண் குழந்தை தற்கொலைக்கு காரணமான கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேல், மாமியார் சிவகாமி மற்றும் கருவை கலைக்க முயற்சிக்க உதவிய அதே ஊரை சேர்ந்த சாரதி ஆகிய 4 பேரை கீழ்பென்னாத்தூர் போலீசார் கைது செய்தனர்.
English Summary
Pregnant woman commits suicide with daughter