'டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது'; சி.பி.ஐ விசாரணைக்கு பின்னர் விஜய்யின் வீடியோவை பகிர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா..!
Adhav Arjuna shares a video of Vijay following the CBI inquiry
தமிழகம் உள்ளிட்ட 05 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று, மே 04 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த தேர்தலில் விஜயின் அரசியல் பிரவேசம் கவனம் ஈர்த்துள்ளது. அவர் முதல் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ளார். விஜய் தவெக பரப்புரை மேடைகளில் இத்தேர்தலில், திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என தொடர்ந்து கூறி வரும் நிலையில், அரசியல் நோக்கர்களும் தவெக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதோடு, தேர்தல் நடத்தை முறைகளும் அமலுக்கு வந்திருக்கின்றன.
கரூர்கூட்ட நெரிசல் தொடர்பான 03-ம் கட்ட சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று டெல்லியில் ஆஜரானார். அவரிடம் சுமார் 06 மணி நேர விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது, காரில் இருந்தபடி கையசைத்து வந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும். இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும். மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும். எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Adhav Arjuna shares a video of Vijay following the CBI inquiry