மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதி இடைத் தேர்தல்; அஜித் பவார் தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டி..?
Sunetra Pawar to contest the Baramati constituency by election in Maharashtra
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என 05 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் இடைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கவுள்ளமை கவனம் பெற்றுள்ளது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுடன், ஆறு மாநிலங்களில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவா, குஜராத், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியையும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் காலியாகவுள்ள தலா இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பாராமதி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் பெரும் கவனம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் காலியாகவுள்ள பாராமதி மற்றும் ரஹுரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 2 3ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதில், பாராமதி சட்டமன்ற உறுப்பினராகவும், தேசியவாத காங்கிரஸின் தலைவராகவும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் இருந்து வந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி விமான விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து எம்.பியாக இருந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 26-ஆம் தேதி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸின் தலைவராகவும் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள நிலையில், சுனேத்ரா பவார் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதன்படி, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவி ஏற்ற சுனேத்ரா பவார், மாநிலத்தின் மேலவை உறுப்பினராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை. இந்நிலையில், துணை முதலமைச்சராக இருக்கும் சுனேத்ரா பவார் தற்போது பாராமதி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Sunetra Pawar to contest the Baramati constituency by election in Maharashtra