ராகுல் டிராவிட்க்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது; இந்திய அணியின் 30 ஆண்டுக்கால வளர்ச்சி குறித்து பெருமிதம்..!
Colonel CK Nayudu Lifetime Achievement Award for Rahul Dravid
பிசிசிஐ-யின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில், இந்திய கிரிக்கெட்டிற்காக ராகுல் டிராவிட் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, அவருக்கு உயரிய விருதான 'கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. ஆண்களுக்கான இரண்டு டி20 உலகக் கோப்பைகள், பெண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் உலகக் கோப்பைகள் என அனைத்து ஐசிசி (ICC) கோப்பைகளையும் இந்தியா வென்றுள்ளது.
விருது விழாவில் பேசிய டிராவிட், கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வளர்ந்த விதம் பிரமிக்க வைப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் மேலும், பேசிய டிராவிட், இந்திய கிரிக்கெட்டிடம் எப்போதும் அபாரமான திறமை இருந்தது. தற்போது அந்தத் திறமை மைதானத்தில் வெற்றிகளாக மாறத் தொடங்கியுள்ளது. இதற்குக் கடின உழைப்பாளிகளான வீரர்கள், சிறந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் குறித்தும் ராகுல் டிராவிட் பேசினார். அதாவது, சஞ்சு நீண்ட காலமாக அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். கடினமான காலங்களைச் சந்தித்த அவர், உலகக் கோப்பையின் கடைசி மூன்று முக்கியமான போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து, இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகுந்த நிறைவைத் தருகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தற்போதைய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அழுத்தங்களைக் கையாண்டு கோப்பையை வென்ற விதம் மிகச்சிறப்பானது என்று இந்திய அணியை பாராட்டி பேசியுள்ளார்.
English Summary
Colonel CK Nayudu Lifetime Achievement Award for Rahul Dravid