முதல்வர் விஜய்க்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா? தயக்கமாக இருக்கிறது! ஓபனாக சொன்ன பேரரசு!
A felicitation ceremony for Chief Minister Vijay on behalf of the film industry I feel hesitant Perarasu speaks candidly
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து இயக்குநர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.
சினிமா துறையிலிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் ஆட்சி, பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர சந்தித்து வருகிறது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த விஜய், சில மாதங்களாக நிர்வாகத்தை வழிநடத்தி வருகிறார்.
விஜய் ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று சிலர் கூறி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவும் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பும் காரணமாக ஐந்தாண்டு காலத்தையும் இந்த அரசு நிறைவு செய்யும் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
அதேநேரத்தில், சமீபத்திய சில சம்பவங்கள் அரசுக்கு எதிராக விமர்சனங்களை அதிகரித்துள்ளன. லஞ்சம் தொடர்பாக முதலமைச்சர் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த சில நாட்களிலேயே, தவெக நிர்வாகி ஒருவர் மீது லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், விசாரணைக் கைதியின் மரணம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இருப்பினும், இவை காலப்போக்கில் சரிசெய்யப்படும் என விஜய் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சினிமா துறையிலிருந்து முதலமைச்சராக உயர்ந்த விஜய்க்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, இந்த முயற்சிக்கு இயக்குநர்களே முதலில் முன்வந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய்க்கான பாராட்டு விழாவில் இயக்குநர்களுக்குத்தான் முதல் பங்கு இருக்கும். முதலில் நாங்கள்தான் இந்த கோரிக்கையை முன்வைத்தோம். அதன் பிறகுதான் தயாரிப்பாளர்கள் இணைந்தனர். ஒரு ஹீரோவின் வளர்ச்சியில் இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது. இயக்குநர்களின் கற்பனையால்தான் எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் மக்களிடம் பெரிய நட்சத்திரங்களாக உருவாகியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம். ஆனால் விஜய் தரப்பில் இன்னும் அதற்கான ஆர்வம் தென்படவில்லை. அவர்கள் சற்று தயக்கமாக இருப்பதாக தெரிகிறது. எனவே நாங்களே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
விஜய்க்கான பாராட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், திரைத்துறையின் இந்த முயற்சி குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
A felicitation ceremony for Chief Minister Vijay on behalf of the film industry I feel hesitant Perarasu speaks candidly