அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு 10% ஆக உயருமா? விஜய்யின் புரட்சிகர முடிவு! தமிழக அரசு ஆலோசனை!
Will the internal quota for government school students in medical courses rise to 10 Vijay revolutionary move Tamil Nadu government deliberates
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தற்போது நடைமுறையில் உள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டை வட்டாரத் தகவல்களின்படி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இதுகுறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் விரைவில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வு அறிமுகமான பிறகு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை கணிசமாகக் குறைந்தது. இதனை சமாளிக்கும் வகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத கிடைமட்ட உள்ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
தற்போதைய அரசு, கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தினால் மேலும் பல மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கருத்து நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் சட்டத் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்குள் சட்டச் சிக்கல்கள் இன்றி இந்த மாற்றத்தை எவ்வாறு அமல்படுத்துவது, நடப்பு கல்வி ஆண்டிலேயே இதை செயல்படுத்த முடியுமா, அல்லது தனிச்சட்டம் இயற்ற வேண்டுமா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் இந்த உயர்வு எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதும் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மருத்துவ இடங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உள்ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ஆண்டுதோறும் கூடுதலாக பல அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேரும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தகுதி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்று வரும் நிலையில், இந்த உள்ஒதுக்கீட்டு உயர்வு நடைமுறைக்கு வந்தால், அது சமூக நீதி மற்றும் கல்வி சமத்துவத்தை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக அமையும் என கல்வி வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Will the internal quota for government school students in medical courses rise to 10 Vijay revolutionary move Tamil Nadu government deliberates