லஞ்ச ஒழிப்பை வலியுறுத்திய முதல்வர் விஜய்!அடுத்தடுத்து வரும் பஞ்சாயத்து!தூய சக்தி இமேஜ் உடையுதே! விஜய் உஷாரா இருக்கணும்!
Chief Minister Vijay has called for the eradication of corruption Yet one controversy follows another His image of integrity is taking a hit Vijay needs to be on his guard
லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் தொடர்பான வீடியோ புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவால், ஆட்சியின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், "யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது என்று தைரியமாக சொல்லுங்கள்; என் பெயரையே சொல்லுங்கள்" என்று பொதுமக்களிடம் வலியுறுத்தியிருந்தார். அந்தப் பேச்சு வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீராசாமி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
வெளியான தகவல்களின்படி, மாம்பாக்கம் பகுதியில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்தப் பணிக்கான தொகையை விடுவிக்க ரூ.1.30 லட்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொகை லஞ்சம் அல்ல, பணக் கைமாற்று மட்டுமே என்று வீராசாமி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட ஒன்று மட்டுமல்ல என்றும், பல்வேறு துறைகளில் ஒப்பந்தப் பணிகளுடன் தொடர்புடைய கமிஷன் நடைமுறைகள் தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை சில ஒப்பந்ததாரர்கள் முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஊழலற்ற நிர்வாகம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்ததாகவும், முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலேயே கமிஷன் மற்றும் ஊழலுக்கு இடமிருக்காது என்று உறுதியளித்திருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில், பல்வேறு துறைகளில் கமிஷன் தொடர்பான புகார்கள் எழுந்து வருவதாகவும், சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில், ஊழல் தொடர்பான புகார்கள் ஆரம்ப நிலையிலேயே விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அரசின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிப்படுத்த முதல்வர் விஜய் நிர்வாக செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Chief Minister Vijay has called for the eradication of corruption Yet one controversy follows another His image of integrity is taking a hit Vijay needs to be on his guard