ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை; தவெக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள பா.ரஞ்சித்..!
Pa Ranjith welcomes Thaweka government's action in Armstrong murder case
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் வழக்கில் சிபிஐ விசாரணை நோக்கிய தவெக அரசின் இந்த முடிவை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலைப்பாட்டை, நீலம் பண்பாட்டு மையம் முழு மனதுடன் வரவேற்கிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதியில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், விசாரணையின் மீது பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணை நோக்கிய தவெக அரசின் இந்த முடிவு முக்கியமானது.
அதேவேளையில், இந்த விசாரணை எந்தவித அரசியல் அல்லது பிற தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் நடைபெற்று, ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திய அனைத்து ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வழக்கில் நீதி தாமதமின்றி நிலைநாட்டப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே ஆம்ஸ்ட்ராங்குக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகவும், ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Pa Ranjith welcomes Thaweka government's action in Armstrong murder case