பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்; ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு; பாதுகாப்பு பணியில் 4,000 ரேஞ்சர்கள்; ராவலகோட் நகருக்குள் பத்திரிகையாளர்கள் நுழைவதற்குத் தடை ..!
4000 Rangers on security duty during peoples protest in Pakistan occupied Kashmir
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி மக்கள் போராட்டம் நடைபெறுகிறது.
அங்கு கோதுமை மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்கான மானியங்களை குறைத்ததே மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், இப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சாரம் பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்குக் குறைந்த விலையில் அனுப்பப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்குக் கடுமையான மின் கட்டணம் விதிக்கப்படுவதால் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த காரணங்களை கொண்டு அங்குள்ள மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தீவிரப் போராட்டங்களை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகிறது. அனால், இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
மக்களின் போராட்டப் பேரணியைத் தடுப்பதற்காக, ஆளும் தரப்பு குறைந்தது 4,000 ரேஞ்சர்ஸ், காவல்துறை மற்றும் எல்லைப் படை வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஆனாலும், அக்குழு தனது போராட்ட இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஆக்கிரமிப்பு தரப்புப் படைகளுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கும் இடையே நடபெற்ற மோதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், ராவலகோட் நகருக்குள் பத்திரிகையாளர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த மோதல்களை ஆயுதம் ஏந்திய ஜேஏஏசி (JAAC) ஆர்வலர்களின் தாக்குதல்களாகத் தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். ஆனால், ஜேஏஏசி இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
4000 Rangers on security duty during peoples protest in Pakistan occupied Kashmir