ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!   - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "சொந்த மண்ணில் சுயாட்சி உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழும்  உரிமையைக் கேட்டு போராடியதற்காக ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதத் தன்மையற்றவர்களால், போர்விதிகளை மீறி கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு இந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். 

உலக வரலாற்றில் ஏராளமான படுகொலைகள் நடந்துள்ளன. அவை அனைத்தையும் விட கொடூரமான இனப்படுகொலையை செய்தவர்கள் இராஜபக்சேவும்  அவரது சகோதரர்கள் உள்ளிட்ட கூட்டாளிகளும் தான்.  உலகின் பிறநாடுகளில் இனப்படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில்  ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது. 

இனப்படுகொலையாளர்களை தண்டிக்க  பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும்  தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கை இனப்படுகொலை நடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் 3 முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். 

பசுமைத்தாயகம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக  இனப்படுகொலை குறித்து  ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது.  ஆனாலும், அது இன்னும் நீதிமன்ற விசாரணை என்ற நிலைக்கு செல்லவில்லை.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவது இந்தியாவால் மட்டும்  தான் சாத்தியமாகும்.  அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத்  தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த  இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Sri Lankan Tamil Inapadukolai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->