பிளேட்டஸ் PC–7 பயிற்சி விமானம் நொறுங்கியது...! – கருப்பு பெட்டி மீட்பு, விசாரணை தீவிரம்!
Platus PC 7 training aircraft crashes Black box recovered investigation intensifies
தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து வழக்கமானபடி புறப்பட்ட “Platus PC-7” சிறிய ரக பயிற்சி விமானம், நேற்று மதியம் 1.30 மணிக்கு ஆகாயத்தை எட்டியது. இவ்விமானத்தை விமானி சுபம் இயக்கி, கேளம்பாக்கம்–திருப்போரூர் வான்வெளியில் 2 மணியளவில் திறனாய்வு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நேரத்தில் திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாதுகாப்பான தரையிறக்குமிடமில்லாத சூழ்நிலையிலும், விமானத்தை கட்டுப்படுத்தி திருப்போரூர் புறவழிச்சாலையில் அவசரமாக தரையிறக்க முயன்றார். ஆனால் சில நொடிகளில் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.

உடனே ஆபத்தை உணர்ந்த சுபம், பாராசூட் மூலம் குதித்து தன்னைக் காத்துக்கொண்டார்.கட்டுப்பாடு இழந்த விமானம், மேலே வட்டமிட்டபடி, திருப்போரூர்–நெம்மேலி சாலையில் உள்ள உப்பு பேக்கிங் தொழிற்சாலை அருகே சேறும் சகதியுள்ள வெளியில் வேகமாக விழுந்து சிதறிக் நொறுங்கியது.
அதன் பாகங்கள் பல திசைகளில் பறந்ததால், தொழிற்சாலையின் சுத்திகரிப்பு மையம் சேதமடைந்து, அங்கு இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறியடித்து வெளியில் ஓடினர்.விபத்து செய்தி காற்றில் பரவியவுடன் பொதுமக்கள் அங்கு திரண்டனர்; ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணமாக அனைவரையும் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் தண்டலத் புறவழிச்சாலையில் பாராசூட்டுடன் தரையிறங்கிய விமானி சுபத்தை பொதுமக்கள் உதவ முயன்றனர். தமிழ் அறியாத விமானி, யாரும் தொல்லை செய்ய வேண்டாம், விமானப்படை மருத்துவ உதவி வரும் என ஆங்கிலத்தில் கூறியபோது, தண்டலம் இளைஞர்கள் பாராசூட்டை குடை போல் தூக்கி நிழல் ஏற்படுத்தி உதவினர்.108 ஆம்புலன்ஸ் வந்தபோதும், விமானி அதில் ஏற மறுத்தார்.
தகவல் தாம்பரம் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்றதும், சிறிய ரக ஹெலிகாப்டர் சம்பவ இடத்துக்கு பாய்ந்தது. அதில் வந்த 2 விமானப்படை வீரர்கள், உடனே ஸ்ட்ரெச்சரில் சுபத்தை ஏற்றி தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் பரங்கிமலை ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து நடந்த இடத்தை விமானப்படை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து, அருகில் யாரும் செல்லாதவாறு ராணுவத்தினர் பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.இதே நேரத்தில், நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி (Black Box) நேற்று (நவம்பர் 14) கண்டுபிடிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சிதறிய பாகங்களை தேடும் பணி தொடர்கிறது.
English Summary
Platus PC 7 training aircraft crashes Black box recovered investigation intensifies