நீட் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


2023-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதித் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளை முன்னாள் முதலவர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையை, "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதற்கேற்ப நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மருத்துவர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவர் ஆவதற்கு மாணவ சமுதாயம் தங்களின் நெடுநாளைய கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் தருவாயில், 2023 ஆம் ஆண்டு மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான தகுதியை தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்துள்ளது இறுதியாண்டு மருத்துவப் படிப்பினை பயிலும் மாணவ, மாணவியரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பு பயில்வதற்கான நீட் தேர்வுக்குரிய பதிவினை 07-01-2023 முதல் 27-01-2023 வரை மேற்கொள்ளலாம் என்றும், இதற்கான அனுமதி சீட்டு 27-02-2023 அன்று வழங்கப்படும் என்றும், 05-03-2023 அன்று நீட் தேர்வு நடைபெறும் என்றும் தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்துள்ளது. 

இந்தத் தேர்விற்கு 31-03-2023-க்குள் மருத்துவப் பயிற்சியை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையின் மூலம் இறுதியாண்டு மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொதுவாக, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது மருத்துவ பயிற்சியை முடிப்பதற்கு ஜூன் மாதம் ஆகிவிடும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பயிற்சியை முடிப்பார்கள் என்பதும், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முடிப்பதற்கு ஜூன் மாதம் ஆகிவிடும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. 

தற்போது இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், பயிற்சியை முடிப்பதற்கான தேதியை தற்போதைய 31-03-2023 லிருந்து 30-06-2023 என மாற்றியமைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இல்லையெனில், இறுதியாண்டு மருத்துவம் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் ஓராண்டினை வீணாக்கக்கூடிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். தேசிய மருத்துவக் குழுவின் இந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே, இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை இந்த ஆண்டே எழுதும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை எழுத வசதியாக விதியினை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அட்டவணையை தேசிய மருத்துவக் குழு அறிவித்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனையை உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இதற்கு உடனடி தீர்வு காண முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops say about neet 2023 24


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->