ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது...ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
One should not speak anything without evidence Supreme Court condemns Rahul Gandhi
ஒரு உண்மையான இந்தியன் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார். அதுவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் இப்படி பேசவேக் கூடாது என ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார் ராகுல்காந்தி .அப்போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசுகையில் , எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர் என பல கருத்துகளை முன்வைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்த விவகாரத்தை ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கங்களிலும் கருத்தாக வெளியிட்டார். இது அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் மறுத்தது. ஆனாலும் ராகுல்காந்தி தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
இதை எதிர்த்து எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், "ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது" என்று சுட்டிக்காட்டி இருந்தார். இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் மனு செய்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் திபன்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
இந்திய ராணுவத்தை ஒருவர் அவதூறாக பேசுவதை எப்படி நியாயப்படுத்த முடியும். அதுவும் அரசியலில் மிகப்பெரிய பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற ஒருவர் இந்திய எல்லை ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்படையான கருத்துக்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என கூறினார்.
மேலும் சீனா அப்படி ஆக்கிரமித்து இருக்கிறது என்பது ராகுல் காந்திக்கு எப்படி தெரியும். எந்த தகவலின் அடிப்படையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஒரு உண்மையான இந்தியன் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார். அதுவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் இப்படி பேசவேக் கூடாது என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர்தனது கருத்தை ஏன் அவர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டியது தானே?பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
English Summary
One should not speak anything without evidence Supreme Court condemns Rahul Gandhi