'என் உயிருக்கு ஆபத்து’...! நீதிமன்றத்தில் மூதாட்டி கண்ணீருடன் சாட்சி...! - மகனின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி
My life danger Old woman testifies court with tears Son manslaughter petition dismissed
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகணேஷ், காணாமல் போனதாகக் கூறிய தனது 72 வயது தாய் ஜெயலட்சுமியை கண்டுபிடித்து மீட்க வேண்டும் எனக் கோரி, மதராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் ஜி.கே. இளந்திரையன் மற்றும் ஆர். பூர்ணிமா அமர்வு விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

மேலும், மனுதாரர் குறிப்பிடும் ஜெயலட்சுமி திருமணம் ஆகாதவர்; பல சொத்துகளின் உரிமையாளரும், முன்னாள் உதவிப் பேராசிரியருமாவார். அவர் செல்வகணேஷை தத்தெடுத்திருந்தாலும், பின்னர் அவரிடமிருந்து மிரட்டல்கள் ஏற்பட்டதாகவும், சில சொத்துகள் கட்டாயமாகப் பறிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதனால் அச்சமடைந்த ஜெயலட்சுமி, பாதுகாப்பு தேடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார்.இந்நிலையிலும், தாயாரை காணவில்லை எனக் கூறி செல்வகணேஷ் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
காவலர்கள் ஜெயலட்சுமியை நேரில் ஆஜர்படுத்தியபோது, “செல்வகணேஷின் நடத்தை அறியாமல் தத்தெடுத்தேன்; என் சொத்துகளுக்கும் உயிருக்கும் ஆபத்து இருந்ததால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் தேடினேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாயப்படுத்தி பெற்ற கையெழுத்துகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யுமாறும் கோரிக்கை வைத்தார்.இதனைத் தொடர்ந்து, ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
அந்தத் தொகையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செலுத்த உத்தரவிடப்பட்டது.மேலும், ஜெயலட்சுமியிடம் சட்டவிரோதமாகப் பெற்ற ஆவண மாற்றங்களை ரத்து செய்ய திண்டுக்கல் மாவட்ட பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மூதாட்டியின் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
My life danger Old woman testifies court with tears Son manslaughter petition dismissed