''இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு''; பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்..!
Chief Minister Vijay condoles the death of playback singer S Janaki
இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூருவில் காலமானார்.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று எஸ். ஜானகி பிறந்தார். சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்ட இவர் இசையின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார். 1957-இல் 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது திரையிசையில் காலடி வைத்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை 04 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பாடகி எஸ்.ஜானகியின் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''பல்வேறு மொழிகளில் பாடி இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர் ஜானகி. தனது இனிமையான குரல், இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Vijay condoles the death of playback singer S Janaki