புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் - மோடியை சாடும் முதல்வர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அந்தப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது:-

"திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இம்முறை வெற்றி பெற வைக்க வேண்டும். தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான். இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்திவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் 'இந்தியா' கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். 

ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி. அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும் போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.

10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அமலாக்கத்துறை கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார். அந்த உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போயுள்ளனர். அந்த பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா அல்லது காமெடி டைமா என குழம்பிவிட்டனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இது மாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார். சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.

மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார். மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin election campaighn in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->