மேல்பாதி கோவில் விவகாரம்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள வன்னியர் சமுதாயத்தினர் வழிபடும் திரௌவுபதி அம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீ மிதி திருவிழாவின் போது  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் பெண்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவத்தில் புகார் அளித்து ஒரு மாதம் கடந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திமுக அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டியலின மக்களுக்கு ஆதரவாகவும், வன்னியர் சமூக மக்களுக்கு எதிராகவும், இழிவாகவும் திமுக அமைச்சர் பொன்முடி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தங்கள் சமூக மக்களை இழிவுப்படுத்தி ஒரு சமூக மக்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌவுபதி அம்மன் கோயிலை கதவுகளை பூட்டி, அதன் நுழைவு வாயிலில் அமர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்காள அடையாளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு வழங்கிய குடியுரிமைக்கான அடையாள அட்டைகளை தரையில் வீசியெறிந்து அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்களை எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அவர்களிடம் இருந்து மண்ணெண்ணை கேனை போலீஸார் பறிக்க முயன்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சு வார்த்தை மாலை வரை நீடித்தது. இரு தரப்பினரும் தனித்தனியாக அமர வைத்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் வரும் புதன்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினரும் ஒன்றாக அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சமூகம் முடிவு வெட்டப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Melpadi Draupadi Amman temple issue peace talks fail


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->