ஆம்பூரில் ஊர்வலம் சென்றதாக குற்றச்சாட்டு; ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 15 பேர் மீதான வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்..!
Madras High Court Quashes Case Against 15 RSS Functionaries
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் 100 -வது விஜயதசமி விழாவைக் கொண்டாடும் வகையில், வி.ஜெயபால் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 02-ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஊர்வலம் செல்ல முற்பட்டனர்.
அப்போது அதை தடுத்து நிறுத்திய ஆம்பூர் போலீசார், அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடி ஊர்வலம் செல்ல முற்பட்டதாகவும், கலைந்து செல்ல மறுத்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி, 15 ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஆம்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, வி.ஜெயபால் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 15 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். நிர்மல்குமார், மனுதாரர்கள் சட்டவிரோதமாக கூடி ஊர்வலம் செல்ல முற்பட்டதாக பொதுமக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, அவர்கள் ஒன்று கூடியதன் மூலம் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறுவதற்கோ அல்லது பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கோ எவ்வித ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, 15 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்..
English Summary
Madras High Court Quashes Case Against 15 RSS Functionaries