மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் 10 கோரிக்கைகள் முன்வைத்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
Minister Adhav Arjuna has submitted 10 requests to Union Minister Nitin Gadkari
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் சாலை மேம்பாட்டிற்கான 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டிற்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது;
''தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்து தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம்.
சாலைப் பாதுகாப்பு கொள்கைகளைத் தமிழ்நாட்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தி விபத்துகளைக் குறைப்பது, முக்கிய உயர்மட்ட மேம்பாலங்களின் சீரமைப்பு மற்றும் நவீன திட்டமிடல்கள், தமிழ்நாடு முழுவதும் நான்கு வழிச் சாலைகளை ஆறுவழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்வது, 2026-27 ஆம் ஆண்டுக்கான சாலை மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான ஒன்றிய நிதியினை விடுவிப்பது உட்பட பத்து முக்கியக் கோரிக்கைகளை வைத்தோம்.
தமிழ்நாட்டிற்குரிய சாலை மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான ஒன்றிய நிதியினை அதிகரித்துக் கொடுப்பது பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 71,313 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அதில், 18,421 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை வெகுவாக குறைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நேர்மையான அரசு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற வழியில் நமது மாநிலத்தின் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி முன்னேறும். தமிழ்நாட்டின் சாலைகள், கட்டமைப்புகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவை உலகத்தர அளவில் முன்னேற்றமடையும்'' என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
''சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் சாலை பாதுகாப்புக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துதல். தமிழ்நாட்டில் சுமார் 1500 கி.மீ. நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்துதல்.
செங்கல்பட்டு – திண்டிவனம் (NH-32) பகுதியை 6 / 8 வழிச்சாலையாக விரிவாக்குதல். கோயம்புத்தூர் புறவழிச்சாலை (நீலாம்பூர்–மதுக்கரை, NH-544) 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல். திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் (NH-81) 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல். கரூர் – கோயம்புத்தூர் (NH-81) பகுதியை சேவைச் சாலையுடன் அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட 6 வழிச்சாலையாக அமைத்தல்.
மாதவரம் – சோழவரம் (NH-16) உயர்மட்டச் சாலை. மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் (NH-48) உயர்மட்டச் சாலை. உப்பிலிபாளையம் மேம்பால சுற்றுச்சாலையை அகலப்படுத்துதல். 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய சாலை மற்றும் உட்கட்டமைப்பு நிதி பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல். ஆகிய கோரிக்கைகளையும் விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Minister Adhav Arjuna has submitted 10 requests to Union Minister Nitin Gadkari