இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் படம்! ‘மஞ்சணத்தி’ பட அறிவிப்பு வெளியீடு!
Ilayaraja Mari Selvaraj to team up for a film Manjanathi movie announcement released
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் மாரி செல்வராஜ், முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்துள்ளார். இந்த புதிய கூட்டணியின் முதல் படமாக ‘மஞ்சணத்தி’ உருவாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ போன்ற படங்கள் மூலம் சமூக அரசியல் கருத்துகளையும், மனித உணர்வுகளையும் ஆழமாகச் சொல்லும் இயக்குநராக மாரி செல்வராஜ் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுவரை சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரஹ்மான், நிவாஸ் கே. பிரசன்னா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அவர், நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த இளையராஜா கூட்டணியை தற்போது நனவாக்கியுள்ளார்.
படத்தின் அறிவிப்பு வீடியோவில், மாரி செல்வராஜ் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு சென்று அவரை சந்திக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இளையராஜா அமைக்கும் இசையை மாரி செல்வராஜ் ஆழமாக ரசிக்கும் தருணங்களும் காணொளியில் இடம்பெற்றுள்ளன. இறுதியில், இளையராஜா தனது கையால் ‘மஞ்சணத்தி’ என்று எழுதி காட்டும் காட்சி படத்தின் தலைப்பை உறுதிப்படுத்துகிறது.
இந்த அறிவிப்பு வீடியோ வெளியாகியவுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தெற்கத்திய வாழ்வியல், நாட்டுப்புற இசை மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் சிறந்து விளங்கும் மாரி செல்வராஜின் படைப்புலகமும், நாட்டுப்புற இசையின் தனித்துவத்தை உலகளவில் அறிமுகப்படுத்திய இளையராஜாவின் இசையும் இணைவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜின் படங்களில் தென் தமிழ்நாட்டின் கலாச்சாரம், மக்கள் வாழ்க்கை, ஒப்பாரி இசை, நாட்டுப்புற கலைகள் போன்றவை முக்கிய பங்காற்றி வந்துள்ளன. அதேபோல், இளையராஜாவின் இசையிலும் இந்த அம்சங்கள் பலமுறை ரசிகர்களை கவர்ந்துள்ளன. எனவே இந்த கூட்டணி தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான இசை மற்றும் கதை சொல்லல் அனுபவமாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ilayaraja Mari Selvaraj to team up for a film Manjanathi movie announcement released